மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு- திமுக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைது !
திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்குப் பல நபர்கள் பாலியல் தொல்லைகள் கொடுத்து கர்ப்பமாக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருச்சிப் புலிவலம் பகுதியில் உள்ள 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக கீழ் சிந்தாமணிப் பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் முத்து மட்டுமல்லாது திமுகவைச் சேர்ந்த பெரமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான செல்வ ராஜ் உள்ளிட்ட மேலும் 3 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்த சிறுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருக்கு இந்த நான்கு நபர்களாலும் வெவ்வேறு காலகட்டங்களில் பாலியல் தொல்லைகள் தரப்பட்டுள்ளன. அவரால் இதை வெளியே சொல்ல முடியாத நிலையை அவர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். தற்போது அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.