கண்டெய்னர் மீது கார் மோதல் - ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான பரிதாபம்
விக்கிரவாண்டி அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சுந்தர்ராஜ் (40). இவர் புதிதாக லாரி வாங்கி உள்ளார். சுந்தர்ராஜ் தனது மனைவி மகாலட்சுமி (35), மகள்கள் ஜோதிகா (13), மதுமிதா (10), உறவினர்கள் பழனி (35), லோகநாயகி (58) ஆகியோருடன் சென்னையிலிருந்து ராமநாதபுரம் முதலுரில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.
கோவிலுக்கு சென்று விட்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் அங்கிருந்து காரில் சென்னை புறப்பட்டார். காரை சுந்தர்ராஜ் ஓட்டியுள்ளார். திங்களன்று (ஜூலை 4) அதிகாலை 3 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சுங்க வரி மையம் அடுக்குப் பாலம் கூட்ரோட்டில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது காருக்கு முன்னால் தூத்துக்குடியில் இருந்து புதுவைக்கு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.திடீரென்று இந்த லாரி வலதுபக்கமாக திரும்பியது. இதனால் எதிர்பாராத விதமாக சுந்தர்ராஜ் ஓட்டி வந்த கார் லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் இருந்த சுந்தர்ராஜ், மகாலட்சுமி, பழனி ஆகியோர் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மதுமிதா, ஜோதிகா, லோகநாயகி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.விபத்து குறித்து விக்கிரவாண்டி காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.
படுகாயம் அடைந்த 3 பேரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே மதுமிதா பரிதாபமாக இறந்தார்.
காயமடைந்த ஜோதிகா, லோகநாயகி ஆகியோருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தினால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.