வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 27 மே 2024 (14:41 IST)

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்.! சத்யபிரத சாஹூ தகவல்..!!

Sathyapratha Sago
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
 
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இதில் தேர்தல் முடிவுற்ற மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
 
இக்கூட்டத்தில், வாக்குப்பதிவு ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில், 43 கட்டிடங்களில் உள்ள 234 அறைகளில் நடைபெற உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
 
பொதுவாக ஒரு வாக்கு எண்ணிக்கை அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும் என்றும் வாக்காளர்கள் எண்ணிக்கை, பதிவான வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் தேவைப்படும் இடங்களில் கூடுதல் மேஜைகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். 
 
வாக்கு எண்ணிக்கை பணியில் 10 ஆயிரம் பணியாளர்கள், அவர்களுக்கு உதவியாக மின்னணு இயந்திரங்கள் எடுத்து வருதல் உள்ளிட்டவற்றுக்காக 24 ஆயிரம் பேர், நுண் பார்வையாளர்களாக 4,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று அவர் தெரிவித்தார். 
 
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு சம்பந்தப்பட்ட மையங்களில் தொடங்கும் என்றும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தொடர்ந்து 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கையும் தொடங்கும் என்றும் அவர் கூறினார். 

 
தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரே, இறுதி சுற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் எண்ணி இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கைக்கான ஒவ்வொரு மேஜையிலும் எண்ணும் பணி கேமராவில் பதிவு செய்யப்படும் என்றும் சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.