ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: சனி, 4 அக்டோபர் 2014 (09:52 IST)

3 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி மாணவன்

திருப்பூரில் 12 ஆம் வகுப்பு மாணவனால் பாலியல் வன்கொடுமை செய்யபபட்ட 3 வயது சிறுமி உயிரிழந்தார்.
 
இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது:-
 
“திருப்பூர், வளையங்காடு பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் 17 வயதுடைய விக்ரம். இவரது வீட்டிற்கு அருகில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
 
அவர்களது 3 வயது மகள் கடந்த 18 ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்தச் சிறுமியைத் தனியே அழைத்துச் சென்று விக்ரம் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
 
இந்தச் சம்பவம் வெளியில் யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில், அந்தச் சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு பெற்றோரால் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
 
சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். அதன்பிறகே தங்கள் குழந்தைக்கு நடந்த கொடூரம் பெற்றோருக்குத் தெரியவந்தது.
 
இதனிடையே, சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்ததால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அச்சிறுமி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.
 
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மாணவன் விக்ரமை திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், மாணவன் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
 
இதையடுத்து, அம்மாணவன் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பொள்ளாச்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்“. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.