1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 2 அக்டோபர் 2023 (18:43 IST)

அரங்கேற்ற விழாவில் 1500 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட நோபல் உலக சாதனை

karur
கரூரில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன், வள்ளி கும்மி குழுவினரின் அரங்கேற்ற விழாவில் 1500 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட நோபல் உலக சாதனை நிகழ்வு.
 
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அருகம்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோடங்கிபட்டி பிரிவு அருகில் அமைந்துள்ள மைதானத்தில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா இன்று நடைபெற்றது.
 
அருகம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் கோவில் வளாகத்தில் இருந்து முளைப்பாரி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு மைதானத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு நடைபெற்றது அதில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
 
அதனை தொடர்ந்து கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் 1200 பெண்கள் மற்றும் சிறுமியர் ஒரே வண்ணத்திலான பாரம்பரிய  உடையணிந்து கலந்து கொண்டு ஒயிலாட்டம் ஆடினர். மேலும் 300 ஆண்கள் மற்றும் சிறுவர்கள் வேட்டி சட்டை அணிந்து ஒயிலாட்டம் ஆடினர். 1500 பேர் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியை கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி குழு ஒருங்கிணைப்பாளர் ரவி பாரம்பரிய பாடல்கள் பாடி நடத்தினார். மாலை 7:45 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 12.45 மணி வரை தொடர்ந்து 5 மணி நேரம் இடைவிடாது நடைபெற்றதை தொடர்ந்து உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை நோபல் உலக சாதனை நிறுவனம் வழங்கியது.