திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2016 (21:23 IST)

சினிமா நடிகர்களுக்கு ஆசி வழங்கிய116 வயது சாமியார் தவநிலையில் மரணம்

சினிமா நடிகர்களுக்கு ஆசி வழங்கிய116 வயது சாமியார் தவநிலையில் மரணம்

வடிவேலு, டி.ராஜேந்தர் உள்பட பல சினிமா நடிகர்களுக்கு ஆசி வழங்கிய 116 வயது சாமியார் தவநிலையில் மரணமடைந்தார்.
 

 

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பாலூர் கிராமத்தை சேர்ந்த 116 வயது ஆன்மிகவாதி எத்திராஜ் 5.12.1900-ம் ஆண்டு பிறந்தார். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டதால், மூலிகை வைத்தியத்தையும் எளிதில் கற்றார். உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களுக்கு இயற்கை மூலிகைகளை கொண்டு குணப்படுத்தக் கூடிய வல்லமை படைத்தவராக திகழ்ந்தார். மன ரீதியாக ஏற்பட்ட பிரச்சினைகளுக்கும் ஆன்மிகம் மூலமாக தீர்வு கூறி வந்துள்ளார். இதனால் வேலூர், காஞ்சீபுரம், சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் ஏராளமானோர் வந்து தங்களது பிரச்சினைகளை எத்திராஜிடம் கூறினர். ஆன்மிகத்தில் ஈடுபாடு இருந்ததால், திருமணம் செய்து கொள்ளாமல் இல்லற வாழ்க்கையை துறந்தார்.

30 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சீபுரத்தில் இருந்து வெளியேறி வேலூர் மாவட்டம் நெமிலி அடுத்த தக்கோலம் அரசு மருத்துவமனையில் பின்புறம் உள்ள இடத்தில் எத்திராஜ் அடைக்கலம் ஆனார். சிறிய குடிசை அமைத்து ஆன்மிக தொன்று ஆற்றிக் கொண்டே மூலிகை வைத்தியமும் பார்த்தார். எத்திராஜ் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்கள் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கும் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் எத்திராஜிடம் ஆசி பெறுவதற்காக தினமும் தக்கோலம் வந்து சென்றுள்ளனர்.

பிரபல சினிமா நடிகர்கள் வடிவேலு, டி.ராஜேந்தர் உள்பட சினிமா பிரபலங்களும் எத்திராஜிடம் ஆசி பெறுவதற்காகவே அடிக்கடி வந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. வைத்தியம் பார்ப்பதற்காக, யாரிடமும் அவர் கட்டணம் வசூலிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பகுதியில் அவர் அகஸ்தீஸ்வரர் கோவிலை நிறுவியுள்ளார். கோவில் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இன்னும் ஒருசில வாரத்தில் கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்திருந்தார். இந்த நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த எத்திராஜ் தவநிலையில் நேற்றிரவு சரியாக 7.20 மணிக்கு இறந்தார். ஆன்மிகவாதி எத்திராஜின் இறுதி சடங்கு இன்று மாலை நடந்தது. அவரது உடலை தவநிலையிலேயே அடக்கம் செய்தனர்.