கடலில் விடப்பட்ட 1000 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள்..!!
சீர்காழி அருகே கூழையார், கொட்டாய் மேடு மீனவ கிராமங்களில் பொறிக்கப்பட்ட 1000 ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விட்டனர்.
சீர்காழி அருகே கடற்கரையோர பகுதிகளில் அரிய வகை ஆமை இனமான ஆலிவ்ரெட்லி ஆமை இனப்பெருக்கத்திற்காக வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வந்து செல்லும் ஆமைகள் முட்டையிடுவதற்கு திருமுல்லைவாசல் முதல் கூழையார் கடற்கரை பகுதிகளை அதிகமாக தேர்வு செய்கிறது.
டிசம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை இந்த கடற்கரை பகுதிக்கு வந்து செல்லும் ஆமைகள் குழி தோண்டி 100 முதல் 150 முட்டைகள் வரை விட்டு மூடி சென்றுவிடும். அவ்வாறு முட்டை இட்டு சென்றவுடன் அந்த முட்டைகளை நாய், மனிதர்களிடம் இருந்து பாதுகாப்பாக வைப்பதற்காக கூழையார், கொட்டாயமேடு, வானகிரி, மாணிக்கப்பங்கு உள்ளிட்ட ஆறு இடங்களில் வனத்துறையினர் சார்பில் முட்டை பொறிப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த முட்டை பொரிப்பகங்களில் வனத்துறையினரால் சேகரித்த முட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியே வந்தவுடன் அவைகள் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரையில் இந்த முட்டை பொரிப்பகங்களில் 30,000 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10,000 முட்டைகள் அதிகமாக சேகரித்து வைத்துள்ளனர்.
முதல் கட்டமாக கொட்டாயமேடு, கூழையார் உள்ளிட்ட பகுதிகளில் பொறிக்கப்பட்ட ஆயிரம் ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விட்டனர்.