1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. ரஞ்சனி நாராயணன்
Last Updated : சனி, 20 செப்டம்பர் 2014 (14:51 IST)

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் - ஆன்மாவை வருடிய அமர சங்கீதம்!

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் தனது 9ஆவது வயதில் மேடை ஏறியவர். கர்நாடக இசைக் கலைஞர் யாருமே அதுவரை இசைக்க முயலாத ஒரு மேற்கத்திய இசைக் கருவியைச் சின்னஞ்சிறு வயதிலேயே மேதையைப் போல இசைத்தவர். 

மாண்டலின் என்னும் இந்த மேற்கத்திய இசைக் கருவிக்குத் தவில் வாத்தியத்தைப் பக்க வாத்தியமாகக் கொண்டு கர்நாடக இசை கச்சேரி செய்து, ரசிகர்களை அசத்தியவர். 11 வயதில் தமிழக அரசின் ஆஸ்தான வித்துவான் ஆனவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். 

இளம் பாலகனாய் மாண்டலின் வாசிக்கும் ஸ்ரீநிவாஸ் (காணொலி)
 

 


1985ஆம் ஆண்டு, தனது 16 வயதில் ஸ்ரீநிவாஸ் வாசிக்கிறார்
 
 
இத்தனை சிறப்புகள் இருந்த மாண்டலின் ஸ்ரீநிவாஸிற்கு ஆயுள் இல்லாமல் போனது அவரது ரசிகர்களை மீளாத துக்கத்தில் ஆழ்த்திவிட்டது. மாண்டலின் என்றால் ஸ்ரீநிவாஸ், ஸ்ரீநிவாஸ் என்றால் மாண்டலின் என்று இசைப் பயணம் செய்து வந்த ஸ்ரீனிவாஸின் இவ்வுலகப் பயணம் 2014 செப்டம்பர் 19 அன்றுடன் முடிந்தது.
 
மேடையில் மாண்டலின் இசைக்கும்போது இவரது முகத்தில் இருக்கும் புன்னகை எவரையும் கவரும். இசையின் இன்பம், அந்தப் புன்னகை மூலம் ரசிகர்களுக்கும் பரவும். சின்னஞ்சிறுவனாக மாண்டலின் இசைக்க ஆரம்பித்த காலத்திலிருந்து இந்தப் புன்னகை அவருடனேயே இருந்தது. 

"இசை ஒரு, தெய்வீகப் பரிசு. எதை வாசித்தாலும் அது கேட்பவர்களின் ஆன்மாவைத் தொட வேண்டும். அது எப்படி சாத்தியம்? நீங்கள் அனுபவித்து வாசித்தால், கேட்பவர்களும் அவ்வாறே அனுபவிப்பார்கள்" என்று மாண்டலின் ஸ்ரீநிவாஸ் ஒரு முறை கூறினார். அவர் கூறியதற்கு ஏற்ப, அனுபவித்து வாசித்து, கேட்பவர்களின் ஆன்மாவை வருடிய அமர சங்கீதக் கலைஞர், மாண்டலின் ஸ்ரீநிவாஸ். 
 
சிறுவயதில் தம் தந்தையின் மாண்டலின் மீது ஏற்பட்ட தீராத ஆர்வம், இவர் ஒரு இசை மேதையாக மலர உதவியது. இவரது குரு ருத்ரராஜூ சுப்புராஜு, ஒரு வாய்ப்பாட்டுக் கலைஞர். அவருக்கு மாண்டலின் இசைக்கத் தெரியாது. அவர் வாயால் பாடுவதைக் கேட்டு மாண்டலினில் வாசிப்பார் ஸ்ரீநிவாஸ். கடினமான பிருகாக்களையும் கமகங்களையும் அனாயாசமாக அந்தக் கருவியில் கொண்டுவருவார். 
 
திருவையாறு தியாகராஜ ஆராதனையில் மாண்டலின் ஸ்ரீநிவாஸ்
 
 
எல்லோரிடத்திலும் மரியாதையாகவும் பணிவுடனும் நடந்துகொள்ளுவார். ஆரம்ப காலத்தில் மேற்கத்திய இசைக் கருவியான மாண்டலினைக் கர்நாடக இசை வாசிக்கப் பயன்படுத்தியபோது நிறைய எதிர்மறை விமரிசனங்கள் எழுந்தன. அவர் வாசிப்பது கர்நாடக இசையே இல்லை என்று கூட கேலி செய்தனர். தமது அபாரமான வாசிப்பால் அத்தனை வாய்களையும் மூட வைத்தார். 
 
இசையுலகில் வெற்றிக் கொடி நாட்டிய ஸ்ரீனிவாஸின் சொந்த வாழ்க்கை, அத்தனை சந்தோஷமானதாக அமையவில்லை. இவரது மனைவி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓர் ஐஏஎஸ் அதிகாரியின் பெண். தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாக கூறி மனைவி யுவஸ்ரீ மீது இவர் போட்ட வழக்கு, இவருக்கு 2012இல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுத் தந்தது. இவர்களது ஒரே மகன் சாய்கிருஷ்ணா இப்போது அம்மாவுடன் இருக்கிறார். புட்டபர்த்தி சாய்பாபாவின் பக்தரான இவர், 2011இல் சாய்பாபா இறந்தது முதல் மிகுந்த துயரத்திலும் மன அழுத்தத்திலும் இருந்ததாகத் தெரிகிறது.
 
கர்நாடக சங்கீதம் மட்டுமில்லாமல் இணைவு இசையிலும் (fusion music) ஆர்வம் கொண்டிருந்தார் ஸ்ரீநிவாஸ். இந்தியாவில் ஜாகிர் உசேன், ஷங்கர் மகாதேவன் ஆகியோருடனும், வெளிநாட்டுக் கலைஞர்கள் பலருடனும் சேர்ந்து ஃப்யுஷன் இசையை வாசித்தவர். 

John Mclaughlin, U Srinivas, Zakir Hussain, V Selvaganesh, Mahadevan - Jazz a Vienne



இந்த இளம் கலைஞனுக்கு நமது அஞ்சலிகள்.