திங்கள், 18 நவம்பர் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. ரஞ்சனி நாராயணன்
Last Updated : வெள்ளி, 31 அக்டோபர் 2014 (13:02 IST)

முதல் முறையாகச் செல்லப் பிராணிகளுக்கு ஒரு தகன இடம்

பெங்களூருவில் செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள், மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள். காரணம் பெங்களூரு மகாநகர பாலிகே, செல்லப் பிராணிகளுக்கென்று முதன்முதலாக தகன இடம் ஒன்றை அமைக்கப் போகிறார்கள். இங்கு இரண்டு நீற்றுலைகள் (incinerator) அதாவது எரிதொட்டிகள் அமையவிருக்கின்றன. ஒன்று சிறிய பிராணிகளான நாய், பூனை இவற்றிற்கும் இன்னொன்று பெரிய விலங்குகளுக்கும். இன்னும் ஒரு மாதத்தில் இந்த தகன இடம் திறக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பெங்களூரு மகாநகர பாலிகேயின் இந்தச் செயலைப் பலரும் பாராட்டியிருக்கிறார்கள். நடிகை அயிந்த்ரிதா ராய், இதைப் பற்றிப் பேசும்போது சொன்னார்: ‘இது ஒரு நல்ல விஷயம். இன்னும் முன்னாலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நாய், மனிதனின் நல்ல தோழன். சிலர் தங்கள் குடும்ப அங்கத்தினராகவே நாய்களை எண்ணுகிறார்கள். அதனால் அவை மரிக்கும்போது அவற்றை நல்ல முறையில் வழியனுப்ப எண்ணுகிறார்கள். செல்லப் பிராணிகளுக்கு என்று தனியாக இடம் ஒதுக்குவது வரவேற்கத்தக்கது. இந்த வருட பட்ஜெட்டின் போது செல்லப் பிராணிகளுக்கு வரிவிலக்கு பற்றிக் கூட பேசினார்கள். இதெல்லாம் நடந்தால் நிறைய பேர்கள் செல்லப் பிராணிகள் வளர்க்க முன் வருவார்கள்’. 
 
நாய்விரும்பி திருமதி பிரியா செட்டி ராஜகோபால், தனது நாயின் நினைவுக்காகப் பரிசுகூட கொடுக்கிறார். ‘இந்தப் பரிசு, மக்கள் பிராணிகளின் மேல் காட்டும் அக்கறையைப் பாராட்டுவதற்குத்தான்’ என்று சொல்லும் இவர், கடந்த ஒரு வருடமாக இந்தச் செல்லப் பிராணிகளுக்கான தனியான தகன இடத்திற்காக ரொம்பவும் முயற்சி செய்திருக்கிறார். 
 
‘பெங்களூரு நகரசபை கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த விஷயத்தைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அரசின் இந்த நடவடிக்கை நிச்சயம் பாராட்டத்தக்கது. சுற்றுச் சூழலுக்கும் உகந்தது இந்தத் திட்டம். பெரும்பான்மையானவர்கள் ஹிந்துக்கள் என்பதால் செல்லப் பிராணிகளின் சாம்பலை எப்படி சம்பிரதாய முறைப்படி அகற்றுவது என்றும் இங்கு வசதிகள் செய்து தரப்படும்; இங்கு ஒரு பிராணிகள் மருத்துவர் ஒருவரும் இருப்பார் என்றும் கேள்விப்பட்டேன். பெங்களூரு எப்போதுமே செல்லப் பிராணிகளின் தோழமை நகரம். அதனால் இங்கு இந்தத் தகன இடம்  வருவது மிகவும் சரியானது தான்’.
 
செல்லப் பிராணிகளுக்கான தகன இடம் பெங்களூரில் அமையவிருப்பது, இதுதான் முதல் முறை என்றாலும், ஏற்கனவே பீபிள் ஃபார் அனிமல் என்ற அமைப்பு ஒரு இடுகாட்டை அமைத்திருக்கிறது. ‘செல்லப் பிராணி என்பது பலருக்கும் குடும்ப உறுப்பினரைவிட மேலானது. எனக்குத் தெரிந்து எங்கள் இடுகாட்டிற்கு ஒரு பெண் அவளது செல்லப் பிராணி இறந்தபின் தினமும் தனது இன்னொரு செல்லப் பிராணியை அழைத்து வருவாள். அந்த இன்னொரு செல்லப் பிராணி, தன்னுடனிருந்த இன்னொரு செல்லப் பிராணி இறந்துவிட்டது என்பதை ஏற்க மறுக்கிறதாம். அதற்காகவே இவள் தினமும் இந்த நாயை அழைத்துக்கொண்டு இறந்த நாயின் கல்லறையை அதற்குக் காட்டுகிறாளாம்’ என்கிறார் பீபிள் ஃபார் அனிமல் அமைப்பைச் சேர்ந்த தீபக் நாயக்.
 
‘அதுவுமில்லாமல் உயிருடன் இருக்கும்போது நம் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் செல்லப் பிராணிகளின் மறைவிற்குப் பிறகு அவற்றுக்கு நல்லபடியாக விடை கொடுப்பதும் நம் கடமை அல்லவா? அரசு செல்லப் பிராணிகளை வீட்டினுள்ளேயே அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை. காலி இடங்களிலும் அவற்றை அடக்கம் செய்ய முடியாது. வீட்டினுள் அடக்கம் செய்தால் எலி, பெருச்சாளி இவற்றைச் சமாளிக்க வேண்டும். இதுபோல ஒரு தகன இடம் வருவது மிகவும் வரவேற்கத் தக்கது. செல்லப் பிராணிகளின் சொந்தக்காரர்களுக்கு ஏற்படும் அல்லல்களை அரசு புரிந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது’ என்று தொடர்ந்து கூறுகிறார்.
 
‘வீட்டில் வளரும் செல்லப் பிராணிகளுக்கு மட்டுமில்லாமல், தெருவில் திரியும் பிராணிகளுக்கும் அவை இறந்த பின் இங்கு எடுத்து வந்து தகனம் செய்யலாம். தற்சமயம் அரசு இதுபோல தெரு நாய்களின் உடல்களை எங்கோ ஓரிடத்தில் குழி வெட்டிப் புதைக்கிறது. அங்கிருப்பவர்களுக்கு இது ஒரு பெரிய தொல்லையாக உருவாகியிருக்கிறது. இனி தெரு நாய்களுக்கும் நல்லமுறையில் கடைசி விடை கொடுக்கலாம்’ என்று சந்தோஷப் பெருமூச்சு விடுகிறார் Compassion Unlimited Plus Action (CUPA) அமைப்பை சேர்ந்த ஒரு அதிகாரி. 
 
தாமதமானாலும் நல்ல விஷயம் என்றால் நாமும் பாராட்டலாம், இல்லையா?