ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சமூக அவல‌ம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 18 ஜூலை 2016 (14:20 IST)

கடைசி லெனின் ஆக இருக்கட்டும்

கடைசி லெனின் ஆக இருக்கட்டும்

இந்த சமூகத்தின் மாபெரும் சாபக்கேடுகளில் ஏற்றுக் கொள்ள முடியாதவைகளில்ஒன்று விவசாயிகளின் தற்கொலைகள்  மற்றொன்று  பட்டதாரிகளின் தற்கொலைகள்.


 


மதுரை அனுபானடியைச் சேர்ந்த லெனின் என்ற பொறியியல் பட்டதாரியின் தற்கொலை கல்விக்கடன், கல்விக்கடன் வசூலிக்கப்படும் முறை, வேலை இல்லா பொறியியல் பட்டதாரிகளின் மன உளைச்சல் என இவற்றையும் தாண்டி இந்த சமூகத்திற்கு பல கேள்விகளை முன்வைக்கின்றது.

அண்ணா பல்கலைக் கழகமே உன் பதில்கள் என்ன ?

ஒரு தொழிற்சாலையில் தேவையைப் பொறுத்துதான் பொருளை உற்பத்தி செய்யவேண்டும். அப்போதுதான் நிறுவனம் லாபத்தில் இயங்கும். இதன் பெயர் Supply and Demand Concept. அதைப்போலதான் நாமும் job market ஐ பொறுத்து பொறியியல் பட்டதாரிகளை உருவாக்க வேண்டும். சில முதலாளிகளின் சுயநலம், பெற்றோர்களின் பேராசை, அரசின் அலட்சியம்தான் இந்த  லெனின்கள்.  உலகின் தலைச்சிறந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் லட்சம் மாணவர்களுக்கு அவர்களின் கல்வி மற்றும் இன அடிப்படையில் ஒற்றைசாரளர் முறையில் கவுன்சலிங் நடத்தி சீட் அல்லாட்மென்ட் செய்கின்றது. அத்தோடு பல்கலைக்கழகத்தின் பணி முடிந்து விட்டதா என்ன? என்றாவதுதான் உருவாக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கும், அந்த ஆண்டின் job market க்கும் தொடர்பு இருக்கிறதா என்று தனது ஆராய்ச்சியை விரிவுப்படுத்தியது உண்டா?

உலகின் தலைச்சிறந்த மேலாண்மை, இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், கம்ப்யூட்டிங் துறைகளைப்பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் இது தொடர்பான Predicitive Analytics ஆய்வுகளை ஏன் செய்யவில்லை? வெறும் வெற்று காகிதக்களை விநியோகிப்பதுதான் எங்கள் பணி என்று சொல்கிறீர்களா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. கடந்த பத்து ஆண்டுகளில் பொறியியல் பட்டம் பெற்றவர்களின் இன்றைய நிலையை நிபுணர் குழு ஆய்வு செய்து விட்டு அடுத்த ஆண்டு ஒற்றை சாரளர் முறையில் கவுன்செலிங் நடத்த முன்வருமா அண்ணா பல்கலைக்கழகம்?. வரும் ஆண்டுகளில்தான் சீட் அல்லாட்மென்ட் வழங்கும் ஒவ்வாருவருக்கும் வரும் ஆண்டுகளில் வேலைவாய்ப்பினை உறுதி செய்ய முடியுமா?

அரசியல்வாதிகளே உங்கள் பதில்கள் என்ன ?

மரணங்கள் அரசியல் ஆக்கப்படுவது வேதனை. லெனின் தற்கொலை சார்ந்து கல்விக்கடன் ரத்து என்ற கோஷத்தை  முன்வைக்கும்   அரசியல்வாதிகளே, கல்விக் கடன் ரத்து நிரந்தர தீர்வா? உங்களால் மஹாத்மா காந்தி நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டம்போல ஒன்றை செயல்படுத்தி பொறியியல் பட்டதாரிகளுக்கான mass employment ஐ உருவாக்க முடியுமா? கல்விக் கடன் ரத்து என்பதை விட்டு அனைத்து பொறியியல் பட்டதாரிகளுக்கும் வேலை என்ற உத்திரவாதம் தர முடியுமா ?

பெற்றோர்களே உங்கள் பதில்கள் என்ன ?

தகவல் தொடர்புப்புரட்சியின் விளைவுகளில் முக்கியமான ஒன்று onsite job and இரு இலக்க லட்ச சம்பளம். இதை மட்டும் வைத்து ஏன் நீங்கள் உங்களின் பிள்ளைகள் மீது உளவியல் தாக்குதல் நடத்துகிறீர்கள்? உங்களின் பிள்ளைகளின் விருப்பம், அவர்களின் தகுதி அடிப்படையாகக்கொண்டு ஏன் பாடபிரிவுகளை தேர்வுசெய்வது இல்லை?. கணிணி பொறியியல் மின்னணு பொறியியல் மட்டும்தான் படிப்புகளா என்ன? உங்களின் முதலீடுகள் மிகக் குறுகியகாலத்தில் அதிக பலன்தரும் துறைகள் இவை என்று நினைக்கீறிர்களா? உங்களின் கண்களுக்கு விவசாய பொறியியல், உணவு தொழில் பொறியியல், வேதிய பொறியியல், இயந்திர பொறியியல் துறைகள் எல்லாம் தெரிவதில்லை ஏன்? இந்த துறைகள்தான் தொழில் முனைவோர்களையும் ஆர்வலர்களையும் உருவாக்குகிறது என்பதை ஏன் நீங்கள் அறிய விருப்பவில்லை?. கடைசியாக ஒன்று சுவர்களுக்காக சித்திரம் வரையுங்கள், சித்திரங்களுக்காக சுவர்களை செய்யாதீர்கள். இறந்த நம் தம்பி லெனின், கடைசி லெனின் ஆக இருக்கட்டும்.



இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 

[email protected]