தினமும் நெல்லிக்காய் ஜுஸ் குடிப்பதால் என்ன பயன்கள்...?
நெல்லிக்காயை நாம் ஊறுகாய், பச்சடி, ஜூஸ் என பல விதங்களில் உணவாக உட்கொள்கிறோம். கசப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளை உள்ளடக்கிய இயற்கை மருந்து நெல்லிக்காய். நெல்லிக்காயில் ஏராளமான மருத்துவ பயன்கள் உள்ளன.
நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளன. இது முகச் சுருக்கங்களை தடுக்கவும், குறைக்கவும் உதவக்கூடியது. எனவே என்றும் பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெற தினமும் நெல்லிக்காய் ஜுஸ் உடன் தேனை கலந்து தொடர்ந்து குடித்து வரலாம்.
நெல்லிக்காய் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது என பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கண் பார்வையை மேம்படுத்தவும், கண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் நெல்லிக்காய் பயன்படுகிறது.
நெல்லிக்காய் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த பயனளிக்கும் மருந்தாக விளங்குகிறது. உணவு உட்கொள்வதற்கு முன்னர் ஒரு கப் நெல்லிக்காய் ஜுஸ் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது சாப்பிட தேவையான உணவின் அளவை குறைக்க உதவுகிறது. இதை தொடர்ந்து செய்து வர சில நாட்களிலேயே உங்கள் உடல் எடை குறைவதை நீங்களே உணர்வீர்கள்.
முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க நெல்லிக்காய் உதவுகிறது. கருவேப்பிலை போன்றே நெல்லிக்காயிலும் முடிக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. நெல்லிக்காய் தலை முடியின் வேர்களை வலுவாக்கும், பொடுகு தொல்லையை நீக்கும், அடர்த்தியான தலை முடியை பெற உதவும்.