கோடையில் ஏற்படும் பாதிப்புகளும் அதனை போக்கும் வழிமுறைகளும்....!
கோடைக்காலத்தில் உண்டாகும் அதிக உஷ்ணத்தால் மனிதர்களுக்கு பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கடுமையான வெப்பத்தைத் தாங்க முடியாமல் நம் உடலில் பல நோய்கள் வெளிப்படுகின்றன.
தோலின் வழியாக வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை வெளியேற முடியாமல் வியர்க்குருவில் அழுக்கு போல் தங்கி விடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக் கொள்ளும். உடனே அந்த இடம் வீங்கிப் புண்ணாகும். இதுதான் வேனல்கட்டி இதற்கு நுண்ணுயிர் கொல்லி மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள், வெளிப்பூச்சு களிம்புகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். வேனல் கட்டி வருவதைத் தடுக்க, வெயிலில் அதிகமாக அலைவதைத் தவிர்க் கவும். நிறைய தண்ணீர் பருகவும்.
அளவுக்கு அதிகமான வியர்வை காரணமாக உடலில் நாற்றமெடுக்கும். இதனைத் தவிர்க்க, குளித்து முடிந்ததும் அலுமினியம் குளோரைடு அல்லது ஜிங்க் கலந்த நாற்றம் போக்கும் பவுடர்களை உடலில் பூசிக் கொள்ள வேண்டும்.
உடலில் வெயில் படும் இடங்கள் கறுத்து விடும். சிலருக்கு வெயிலின் உக்கிரம் தாங்க முடியாமல் தோல் கன்றி சிவந்து புண்ணாகி விடும். இதனை `வெப்பப் புண்கள்’ என்கிறோம். இதனைத் தவிர்க்க வெயிலில் செல்லும் போது `சன்ஸ்கிரீன்’ களிம்புகளைத் தோலில் தடவிக் கொள்ளலாம். மேலும் வெயிலில் அலைவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
கோடையில் சிறுநீர்க்கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு காரணம். நிறைய தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சினை சரியாகி விடும்.