அற்புத மருத்துவ பயன்கள் நிறைந்த மூலிகைகள்..!
மலைவேம்பு: 10 மி.லி இலைச்சாற்றைப் பாலில் கலந்து மாதவிலக்கான 3 ஆம் நாள் அதிகாலையில் கொடுத்து வரக் கருப்பைக் குற்றங்கள் நீங்கி குழந்தைப்பேறு கிட்டும். இலையையும், பூவையும் அரைத்துப் பற்று போட கடும் தலைவலி தீரும்.
முடக்கறுத்தான்: இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடல்வலி தீரும். இலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி வர கீல்களில் உள்ள வாதபிடிப்பு தீரும்.
வல்லாரை: இலையை விளக்கெண்ணெயில் வதக்கி நீண்ட நாள் கட்டி வர யானைக்கால் நோய் தீரும்.
மூக்கிரட்டை: இலையை பொரியல் துவையலாக வாரமிருமுறை சாப்பிட்டு வர காமாலை, சோகை, வாய் நோய்கள் வராமல் தடுக்கலாம். இலையை தொடர்ந்து பயன்படுத்தி வர பொலிவும், இளமையும், வசீகரமும் உண்டாகும்.
பொடுதலை: இலையை உளுத்தம் பருப்புடன் நெய்யில் வதக்கி துவையலாக்கி பகல் உணவில் கொள்ள உள்மூலம், இரத்தமூலம் தீரும். சமூலச் சாற்றில் சமன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடித்து வாரம் இருமுறை தலை முழுகி வர கொடுகு தீரும்.
வெற்றிலை: 5 மி.லி. வெற்றிலைச்சாறுடன் சமஅளவு தேன் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு காணும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும். வெற்றிலையை மார்பகத்தில் ஒட்டி வைக்க பால்சுரப்பைத் தடுக்கும்.
வெள்ளறுகு: சமூலத்தை அரைத்து வெந்நீரில் குழைத்து உடம்பில் பூசி 1 மணி நேரம் கழித்துக் குளிக்க சொறி, சிரங்கு தீரும். மாதவிடாயின் முதல் 3 நாட்கள் சமூலத்தை அரைத்து எலுமிச்சங்காயளவு குடிக்க கர்ப்பப்பை புழு, மாதவிடாய் கோளாறு தீரும்.
விஷ்ணுகிரந்தி: சமூல விழுது 10 கிராம் தயிரில் கொடுக்க இரத்த பேதி, சீதபேதி தீரும்.