வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படும் துத்திக்கீரை !!

துத்திக் கீரைகளில்- கருந்துத்தி, சிறு துத்தி, நிலத்துத்தி, பெருந்துத்தி என சில வகைகள் இருக்கின்றன. அனைத்து வகை துத்தியும் ஒரே மாதிரியான மருத்துவ  குணம் பெற்றுள்ளது.

துத்திக் கீரை உஷ்ணப் பிரதேசங்களில் நன்கு பயிராகும். மொத்தம் 20 வகையான துத்தி இனங்கள் உள்ளன. துத்திக் கீரையின் இலை, பூ, காய், முதலிய பாகங்கள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.
 
துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.
 
துத்தியிலையை எடுத்து ஆமணக்கு எண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும். துத்தியிலையை  சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.
 
துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும். துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.
 
சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.
 
துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழலாம்.