பாராளுமன்ற மாடத்திலேயே தற்கொலைக்கு துணிந்த வாலிபர்!
கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனால், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பெரும் சிரமம் நீடித்து வருவதோடு, பணப் புழக்கமும் வெகுவாக குறைந்துள்ளது.
எவ்வித முன்யோசனையும் இல்லாமல், மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால், நாட்டு மக்கள் 2 வாரத்திற்கும் மேலாக பெரும்துயரத்தை அனுபவித்து வருகின்றனர். தங்களிடமுள்ள ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றவும், செலவுக்கு ஏடிஎம்-களில் பணம் எடுக்கவும் வரிசையில் காத்திருந்து இதுவரை 72 பேர் வரை பலியாகியுள்ளனர்.
இதற்கிடையில், இந்த விஷயத்தில் பொதுமக்கள் அரசுக்கு ஏதாவது யோசனை சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்று தெரிவித்து இருந்தார். மேலும், இந்த சர்வே-க்காக, தனது ட்விட்டர் பக்கத்தில் “என்.எம்.ஆப்” என்ற செயலியையும் மோடி இணைத்து இருந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்ற மக்களவையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பார்வையாளர் மாடத்திலிருந்த ஒருவர், மத்திய அரசுக்கு எதிராக திடீரென முழக்கங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்
அன்றாட செலவுக்கு ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் மக்கள் அல்லல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
ஆனால், அதிர்ஷ்டவசமாக, மக்களவைப் பாதுகாவலர்கள் விரைந்து சென்று அவரைப் பிடித்தனர். பின்னர் அந்த வாலிபர் யார்? எப்படி நாடாளுமன்றத்திற்குள் வந்தார் என்பது குறித்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.