1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2024 (11:42 IST)

பெண் மரணம் எதிரொலி: இனி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை: தெலுங்கானா அரசு அறிவிப்பு..!

புஷ்பா 2 திரைப்படம் நேற்று வெளியான நிலையில், இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வந்த பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். இதன் தொடர்ச்சியாக, இனி அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தெலுங்கானா மாநில அரசு தெரிவித்துள்ளது, இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்படம், நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் அதிகாலை சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த காட்சியை பார்க்க, அல்லு அர்ஜுன் நேரடியாக தியேட்டருக்கு வந்திருந்தார். அவரை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குவிந்ததால், அந்த கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

அவருடைய மகனும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் காரணமாக, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததற்கு எதிராக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சிறப்பு காட்சியால் பெண் பலியானதை அடுத்து, தெலுங்கானாவில் இனி அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என மாநில அமைச்சர் கோமதி ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழகத்தை போலவே, தெலுங்கானா மாநிலத்திலும் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்படும் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.


Edited by Mahendran