மல்லையாவை அடுத்து ரூ.7000 கோடி கடன் மோசடியில் வின்சம் குழுமம்


லெனின் அகத்தியநாடன்| Last Modified திங்கள், 20 ஜூன் 2016 (10:02 IST)
கிங்பிஷர் நிறுவனத்தை தொடர்ந்து வின்சம் குழுமம் ரூ.7000 கோடி வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
 
 
வைரம் மற்றும் தங்கம் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வின்சம் குழுமம் சுமார் ரூ.7,000 கோடி வங்கிக் கடன் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வின்சம் குழுமத்திற்கு துபாயில் உள்ள 3 நிறுவனங்கள் மூலம் தங்கம், வைரம் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது
 
2012ஆம் ஆண்டு துபாயில் உள்ள 3 நிறுவனங்கள் வின்சம் குழுமத்துக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்தவில்லை. இதனையடுத்து இந்தக் குழுமம் இந்திய வங்கிகளில் பெற்றிருந்த கடனையும் திருப்பிச் செலுத்தவில்லை.
 
ஆனால் வின்சம் குழுமத்தின் கருத்துப்படி 3ஆம் நபர்களான அந்த துபாய் நிறுவனங்கள் மீது தங்களுக்குக் கட்டுப்பாடு இல்லை என்று இப்போது கூறுகிறது. வர்த்தகம் அந்த 3 குழுமங்கள் மூலம் நடைபெற்றிருக்கும் போது தங்களுக்கு அந்த நிறுவனங்கள் மீது கட்டுப்பாடு இல்லை என்று வின்சம் குழுமம் கூறி சுய முரண்பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டது.
 
15 பொதுத்துறை வங்கிகளிடமிருந்து சுமார் ரூ.7,000 கோடி தொகையை வின்சம் குழுமம் கடன் பெற்றுள்ளது. 3 நிறுவனங்கள் பெயரில் வின்சம் இந்தக் கடனை வாங்கியுள்ளது. வின்சம் டயமண்ட் அண்ட் ஜுவெல்லர்ஸ் பெயரில் ரூ.4,366 கோடி, ஃபாரெவர் பிரசஷஸ் டயமண்ட் நிறுவனத்தின் பெயரில் ரூ.1,932 கோடி, சூரஜ் டயமண்ட் பெயரில் ரூ.283 கோடி கடன் பெறப்பட்டுள்ளது.
 
2013-ம் ஆண்டு கோடைக்காலம் முதல் இந்த நிறுவனம் வங்கிக் கடன் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை. இதனையடுத்து அக்டோபர் மாதம் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்கிறது வின்சம் குழுமம் என்று வங்கிகள் அறிவிக்கை வெளியிட்டது.
 


இதில் மேலும் படிக்கவும் :