இறந்து போன பெண்ணின் இறுதி அஞ்சலிக்கு அனுமதி மறுத்த கிராமம்
ராஜஸ்தான் மாநிலத்தில் உடல் நலக்குறைப்படு காரணமாக இறந்த ஒரு பெண்ணின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கிராமத்தினர் அனுமதி மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா நகரத்திற்கு அருகில் உள்ள சுயானா எனும் கிராமத்தில் வசித்து வந்த சோஹ்னி தேவி என்ற பெண் உடல் நலக்குறைபாடு காரணமாக சமீபத்தில் மரணமடைந்தார். ஆனால், அவரின் உறவினர்களோ, அந்த கிராமத்தை சேர்ந்தவர்களோ அவருக்கான இறுதி அஞ்சலியை செய்ய முன்வரவில்லை. அவ்வளவு ஏன்? அவரின் இரு மகள்கள் கூட அங்கு வரவில்லை.
கணவனை இழந்த சோஹ்னி சில வருடங்களாக ஒரு தலித் சாதியை சேர்ந்த ஒருவரோடு வாழ்ந்து வந்துள்ளார். அதற்கு, அந்த கிராம பஞ்சாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவர்களின் கட்டளைக்கு தேவி கீழ்படியவில்லை. எனவே, அவரிடம் யாரும் பேசக்கூடாது என கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டது.
அவரின் இரு மகள்களும் அவர்களின் உறவினர்கள் வீட்டிற்கு சென்று தங்கி விட்டனர். இந்நிலையில்தான், உடல் நலக்குறைபாடு காரணமாக தேவி மரணமடைந்தார். அவருடன் வசித்து வந்த நபர் தேவியின் உடலை வீட்டிற்கு வெளியே வைத்திருந்தார். ஆனால், 12 மணி நேரமாகியும் பஞ்சாயத்து உத்தரவு காரணமாக, அவரின் உடலை பார்க்க யாரும் வரவில்லை. மேலும், தேவியின் உடலுக்கு அந்த கிராமத்தில் இறுதி அஞ்சலி செலுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்தனர்.
எனவே, வேறு வழியின்றி, அந்த நபர் தேவியின் உடலை அருகிலிருந்த பில்வாரா நகரத்திற்கு எடுத்து சென்று, அங்கு வைத்து அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து எந்த புகாரும் வராததால் தங்கள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.