ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இவ்வளவு கோடி அபராதமா??...காரணம் என்ன??
இடை இணைப்பு வழங்க தவறியதற்காக ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்களுக்கு டிராய் 3,050 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஒரு மொபைல் நெட்வொர்க்கின் வாடிக்கையாளர், மற்றோரு மொபைல் நெட்வொர்க்கின் வாடிக்கையாளருக்கு தொடர்பு கொள்ள, இரு நெட்வொர்க்குகளுக்கும் இடையே ”இடை இணைப்பு” அவசியம். உதாரணத்திற்கு, ஜியோ வாடிக்கையாளர், ஏர்டெல் அல்லது வோடஃபோன் எண்ணிற்கு, இடை இணைப்பு மூலமாக தான் தொடர்புகொள்ளமுடியும். இதே போல் ஏர்டெல் அல்லது வோடஃபோன் வாடிக்கையாளார்கள் ஜியோ எண்ணை தொடர்பு கொண்டாலும், இடை இணைப்பு அவசியம். இந்த இடை இணைப்பை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்க தவறினால், நம்மால் தொடர்பு கொள்ள இயலாது.
அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்ட போது, இடை இணைப்பு வழங்காத காரணத்தினால், ஏர்டெல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு 3 ஆயிரத்து 50 கோடி ரூபாய் அபராதம் விதிக்க, இந்தியாவின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பரிந்துரை செய்துள்ளது. அதாவது பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கு 1,050 கோடியும், வோடஃபோன், ஐடியாவிற்கு 2,000 கோடியும் அபராதம் விதித்துள்ளது.
தொலைத் தொடர்பு துறையின் உச்ச அமைப்பான, டிஜிட்டல் தொலைத்தொடர்பு ஆணையம், டிராயின் இந்த முடிவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனிடையே, பாரதி ஏர்டெல் நிறுவனம், டிஜிட்டல் தொலைத்தொடர்பு ஆணையத்தின் முடிவு ஏமாற்றத்தை அளித்துள்ளதால், இந்த முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்யவிருப்பதாக கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து வோடஃபோன் நிறுவனம், தொலைத் தொடர்பு துறையின் இந்த குற்றச்சாட்டை, நாங்கள் ஏற்கவில்லை எனவும், சட்டரீதியாக அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளது.