ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2024 (09:30 IST)

வெறித்தனமான வெங்கடாஜலபதி பக்தர்! 20 முறை தரிசனம் செய்ததால் கைது! என்ன நடந்தது?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 20 முறை சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்த பக்தர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் திருக்கோவில், தினம்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து வழிப்படும் ஸ்தலமாக விளங்கி வருகிறது. ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் இந்த திருக்கோவிலில் பல்வேறு சிறப்பு தரிசண சேவைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அதிகாலை நடைபெறும் சுப்ரபாத சேவை தரிசனத்தை பெறுவது என்பது பல பக்தர்களின் ஆசையாக உள்ளது. நேற்று அதிகாலை 3 மணியளவில் சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்ய ஸ்ரீதர் என்பவர் சென்றுள்ளார். அவர் வைத்திருந்த ஆதார் அட்டையையும், சுப்ரபாத சேவை டிக்கெட்டையும் அதிகாரிகள் சோதனை செய்தபோது இரண்டிலும் முகம் ஒத்துப்போகாமல் இருந்துள்ளது. 
 

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் தேவஸ்தான பறக்கும் படைக்கு சொல்ல, அவர்கள் ஸ்ரீதரை பிடித்து விசாரித்துள்ளனர். அதில் அவர் குலுக்கல் முறை சேவையான சுப்ரபாத சேவை டிக்கெட்டாஇ பெற போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தி 400 முன்பதிவுகள் செய்திருப்பதும், அதில் 20 முறை டிக்கெட்டுகள் கிடைக்கப்பெற்று சாமி தரிசனம் செய்ததும் தெரிய வந்துள்ளது.

அதை தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் ஸ்ரீதரை காவல்துறையிடம் ஒப்படைத்த நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதி ஏழுமலையான தொடர்ந்து தரிசிக்க பக்தர் மோசடி வேலைகளில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K