உத்தர பிரதேச வன்முறை; யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்! – திருமா கண்டனம்!
உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு பொறுப்பேற்று யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டுமென திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் மத்திய அமைச்சர் பயணித்த பகுதியில் பாஜகவினர் கார் மோதி விவசாயிகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்த கலவரம் உள்ளிட்டவற்றால் பத்திரிக்கையாளர் ஒருவர் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கலவரத்திற்கு பொறுப்பேற்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டுமென வலியுறுத்திய சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிய உத்தர பிரதேசம் வர சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர் வர முயற்சித்த நிலையில் அவர்கள் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அடக்குமுறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் “உத்தரபிரதேசத்தில் நடந்துள்ள கொடூரம் நெஞ்சைப் பதற வைக்கிறது. இதற்குப் பொறுப்பேற்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.