வயநாட்டில் 300-ஐ தாண்டியது பலி எண்ணிக்கை.! மேலும் 240 பேரின் கதி என்ன.? தொடரும் தேடுதல் வேட்டை..!!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 318 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 240 பேர் மாயமாகி உள்ளதால் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகள் இருந்த தடயமே தெரியாத அளவுக்கு அப்பகுதி முழுவதும் சேற்று மண்ணால் மூடப்பட்டுள்ளது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் இன்று 4-வது நாளாக மீட்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழு, கடலோர காவற்படை, இந்திய கடற்படை வீரர்கள் இணைந்து கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கி இதுவரை 318 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாலியாற்றில் மட்டும் 172 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 240 பேரை காணவில்லை என்பதால் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்கிறது.
நிலச்சரிவு பகுதிகளில் இன்னும் யாரேனும் பொதுமக்கள் உயிருடன் உள்ளார்களா என்பதை ட்ரோன்களில் ரேடார் கருவியைப் பொருத்தி அதன் மூலம் கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.