1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 ஜூன் 2023 (09:27 IST)

முதலிரவில் மணமக்கள் திடீர் மரணம்! என்ன நடந்தது? - அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

உத்தர பிரதேசத்தில் திருமணமான புதுமண ஜோடிகள் முதலிரவின் போது மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



உத்தர பிரதேச மாநிலம் கேசர்கஞ்ச் பகுதியில் உள்ள கோதியா கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் யாதவ் என்ற 22 வயது இளைஞர். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த புஷ்பா தேவி என்ற 20 வயது பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

விமரிசையாக திருமணம் நடந்து முடிந்த நிலையில், வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட புதுமண ஜோடிகளுக்கு அன்று முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலிரவு அறைக்குள் சென்ற பின் அவர்கள் தாழிட்டுக் கொண்ட நிலையில் விடிந்த பின் அறைக்கதவை திறக்கவே இல்லை. நீண்ட நேரமாகியும் காலையில் கதவை திறக்காததால் உறவினர்கள் தொடர்ந்து கதவை தட்டி பார்த்துள்ளனர்.

பின்னர் கதவை உடைத்துக் கொண்டு சென்று பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மணமக்கள் இருவரும் படுக்கையில் இறந்து கிடந்துள்ளனர். உடனடியாக அவர்களை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் உடலில் எந்த காயமும் இல்லாத நிலையில் எப்படி இறந்தார்கள் என உடற்கூராய்வு செய்யப்பட்டதில் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிய வந்துள்ளது. முதலிரவு நடந்த அறை காற்றோட்டம் இல்லாத அறை என்பதால் மூச்சடைத்து அவர்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இல்லற வாழ்க்கையில் நுழைய ஆசையாக முதலிரவு அறை சென்ற இளம் ஜோடிகள் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K