திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By சினோஜ்கியான்
Last Modified: சனி, 12 அக்டோபர் 2019 (14:32 IST)

’தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி’ - பிரதமர் மோடி டுவீட்

தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங் நேற்று சென்னை வந்தார். சென்னையில் உள்ள ஐடிசி ஹோட்டலில் தங்கிய அவரை, இந்திய பிரதமர் மோடி சந்தித்தார்.
 
அதன்பிறகு இருவரும் மாமல்லபுரம் கடற்கரைக்குச் சென்றனர்.அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்ணை உருண்டை பாறை, அர்ஜுனன் தபசு, உள்ளிட்ட பகுதிகளைப் பார்த்தனர். பின்னர் இருநாடு உறவுகள் குறித்து இருவரும் பேசினர்.

இந்நிலையில் சீன அதிபர் ஜிங்பிங் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து  விமானத்தின் மூலம் சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றார். 
 
இதுகுறித்து பாரத பிரதமர் மோடி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
’நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். #ChennaiConnect இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்.’
 
’தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.’
 
மேலும், ’மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கும் நன்றி.’என்று தெரிவித்துள்ளார்.
 
இந்த சந்திப்பின் மூலம் தமிழர் உடை, தமிழ், என்று தமிழர்களுடன் மிகவும் நெருங்கியவராகவே ஆகிவிட்டார் பிரதமர் மோடி என பாஜக வட்டாரங்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.