வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2019 (18:41 IST)

விதம்விதமாக அவதாரம் எடுக்கும் லாலு பிரசாத் மகன் – ஏன் தெரியுமா?

பீகாரில் லாலு பிரசாத் யாதவின் மகன் சிவன் கெட் அப்பில் கோவிலில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பலர் பல்வேறு வகையில் விமர்சித்து வருகிறார்கள்.

பீகாரின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ். ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சியின் தலைவரான இவருக்கு ஒன்பது பிள்ளைகள். இரண்டு மகன்கள், ஏழு மகள்கள். அதில் முதல் மகன்தான் தேஜ் பிரதாப் யாதவ். நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் கேபினேட் அமைச்சராக இருந்துள்ளார்.

இவர் இன்று ஜார்கண்டில் உள்ள பாபா பைதியநாத் தாம் கோவிலில் சிவ வேடத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தேஜ் ப்ரதாப் யாதவ் இப்படி செய்வது புதியது அல்ல என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

பாட்னாவில் உள்ள ஆலயங்களில் சிவன் தோற்றத்தில் காட்சி தருவதை தேஜ் பிரதாப் அடிக்கடி செய்திருக்கிறாராம். 2018ல் மே மாதம் அன்று தேஜ் பிரதாப்புக்கும், முன்னாள் முதல்வர் தரோகா பிரசாத் ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராய்க்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது தேஜ் பிரதாப்பை சிவனாகவும், ஐஸ்வர்யா ராயை பார்வதி தேவியாகவும் உருவகித்து பேனர்கள் வைக்கப்பட்டது. அப்போது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் 2017ல் கிருஷ்ணர் கெட் அப்பிலும் காட்சி கொடுத்திருக்கிறார் தேஜ் பிரதாப் யாதவ். கையில் புல்லாங்குழல், தலையில் மயிலிறகுடன் அப்போது வெளியான அவரது அந்த புகைப்படமும் பரவலான விமர்சனங்களை சந்தித்தது.

மக்களின் தெய்வ நம்பிக்கையை வைத்து அவர்களை ஈர்ப்பதற்காகதான் தேஜ் பிரதாப் யாதவ் இப்படியெல்லாம் செய்கிறார் என்று பீகார் அரசியல் வட்டாரங்கள் பேசி வருவதாக கூறப்படுகிறது.