1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 17 ஜூலை 2024 (22:09 IST)

கன்னடர் பணி ஒதுக்கீடு மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! ஐடி நிறுவனங்களுக்கு ஆந்திரா அழைப்பு..!!

Patil
கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் குரூப் சி மற்றும் குரூப் டி பணிகளை 100% கன்னடர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு எதிர்ப்பு அதிகரிக்கும் நிலையில் மேற்கண்ட மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பு ஆழமான ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில  அமைச்சர் எம்.பி.பாட்டீல் உறுதி அளித்துள்ளார்.
 
கர்நாடகாவில் கன்னட மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் அம்மாநில அரசு சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை பணியில் அமர்த்தும்போது, நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீதமும் கன்னடர்களை மட்டுமே நியமிப்பதை உறுதிப்படுத்துவதற்கான மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.   
 
தொழில் நிறுவனங்கள் அதிருப்தி:
 
இது குறித்து முதல்வர் சித்தராமையா வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் குரூப் சி மற்றும் குரூப் டி பணிகளை 100% கன்னடர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பை அடுத்து தொழில்துறையினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.  
 
அமைச்சர் எம்.பி.பாட்டீல் உறுதி:
 
இந்நிலையில், இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக ஆழமான ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சர் எம்.பி.பாட்டீல் உறுதி அளித்துள்ளார். 
 
மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பாக, சட்ட அமைச்சர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், தொழிலாளர் அமைச்சர், மற்றும் பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சரான தான் ஆகியோர் கூட்டாக முதல்வரைச் சந்தித்து இந்த இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.
 
chandrababu naidu
ஆந்திரா அழைப்பு:
 
கர்நாடகாவில் கன்னடர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாஸ்காம் உள்ளிட்ட முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.