திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2016 (00:08 IST)

போலி என்கவுண்ட்டர் வழக்கு - அமித் ஷா விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி

சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்ட்டர் வழக்கில் இருந்து பாஜக தலைவர் அமித்ஷா விடு விக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


 

கடந்த 2005ஆம் ஆண்டு சொராபுதீன் ஷேக், குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், பேருந்தில் சென்று கொண்டிருந்த சொராபுதீனையும், அவரது மனைவியையும் போலீசார் கடத்தி, பின்னர் சுட்டுக் கொன்றதாகவும், இது போலி என்கவுண்ட்டர் என்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
 
இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான துளசி பிரஜாபதி என்பவரும் 2006ஆம் ஆண்டு என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓட முயன்றபோது துளசி பிரஜாதிபதியை சுட்டுக் கொன்றதாக காவல்துறை தரப்பு தெரிவித்தது.
 
இந்த இரு கொலை வழக்குகளிலும் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு இருந்தது என சிபிஐ குற்றம்சாட்டியது. இதனால் அமித்ஷா கடந்த 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதனால் அவர் மோடியின் அமைச்சரவையிலிருந்து பதவி விலகவேண்டி இருந்தது.
 
இவ்வழக்கு 2012ம் ஆண்டு மும்பைக்கு மாற்றப்பட்டது. அங்குநடைபெற்ற விசாரணையின் முடிவில் இந்த கொலைகளுக்கும் அமித்ஷாவுக்கும் தொடர்பு உள்ளது என்பதை உறுதி செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறிய மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம், அவரை வழக்கில் இருந்து விடுவித்தது.
 
மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், மும்பை உயர்நீதிமன்றமும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து அமித் ஷாவை விடுவித்தது.
 
இந்நிலையில், போலி என்கவுண்ட்டர் வழக்கில் இருந்து அமித்ஷா விடு விக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அதிகாரியும் சமூக ஆர்வலருமான ஹர்ஷ் மந்தேர் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
 
இம்மனு நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற வாதப் பிரதிவாதத்தின் முடிவில், அமித்ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.