கங்கையில் நீராடி பாவத்தை கழுவ முடியுமா? சாம்னாவில் அதிருப்தி பதிவு!
மந்திரிசபை விரிவாக்கம் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டம் மீது நடத்தப்பட்ட ஜனநாயக படுகொலை என அதிருப்தி.
ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா பிரிவினர் கிளர்ச்சியால் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்தி பாஜகவுடன் கைக்கோர்த்து ஆட்சி அமைத்தது. ஜூன் மாதம் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணைத் தலைவராகவும் பதவியேற்றதைத் தொடர்ந்து அமைச்சரவையை விரிவாக்குவதில் தாமதம் ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அமைச்சரவை விரிவாக்கம் 40 நாட்களுக்குப் பிறகு நடைபெற்றது. முதல்கட்ட விரிவாக்கத்தின்படி, மொத்தம் 18 பேர் மந்திரிகளாக இன்று பதவியேற்று கொள்கின்றனர். பாஜகவை சேர்ந்த 9 பேர், சிவசேனாவை சேர்ந்த 9 பேர் மந்திரிகளாக பதவியேற்கின்றனர்.
பாஜக எம்எல்ஏக்களில் சந்திரகாந்த் பாட்டீல், சுதிர் முங்கண்டிவார், கிரிஷ் மகாஜன், சுரேஷ் காடே, ராதாகிருஷ்ண விகே பாட்டீல், ரவீந்திர சாவான், மங்கள் பிரபாத் லோதா, விஜய்குமார் காவிட் மற்றும் அதுல் சேவ் இடம்பெற்றுள்ளனர்.
சிவ சேனா கட்சியில் இருந்து தாதா பூசே, சந்தீபன் பும்ரே, உதய் சமந்த், தானாஜி சாவந்த், அப்துல் சத்தார், தீபக் கேசர்கர், குலாப்ராவ் பாட்டீல், சஞ்சய் ரத்தோட் மற்றும் ஷம்புராஜே தேசாய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒரு வழியாக மந்திரி சபை விரிவாக்கம் நடந்து விட்டது. எங்களது அதிருப்தியாளர்கள் கங்கையில் நீராடி விட்டனர். ஆனால் அவர்கள் செய்த துரோகத்தின் பாவத்தை கழுவ முடியுமா?.
மந்திரிகளுக்கு பதவி ஏற்பு விழாவில் ஒரு தெய்வீக செயலை செய்து வைத்தது போல கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் முகம் பளிச்சிட்டது. மந்திரி சபை விரிவாக்கத்துக்கு முன்னதாக ஏக்நாத் ஷிண்டே 7 தடவை தலைநகர் சென்று டெல்லி முன் தலைகுனிந்துள்ளார்.
இந்த மந்திரிசபை விரிவாக்கம் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டம் மீது நடத்தப்பட்ட ஜனநாயக படுகொலை என குறிப்பிடப்பட்டுள்ளது.