செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (15:24 IST)

'நீதிமன்றத்தில் போராடி செந்தில் பாலாஜி விடுதலை பெறுவார்' - டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி.!!

Stalin
செந்தில் பாலாஜி சட்டப்படி வழக்கை எதிர்கொண்டு வழக்கில் இருந்து விடுதலை பெறுவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்,   தமிழ்நாட்டின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தேன் என்று தெரிவித்தார். மெட்ரோ ரயில் திட்டம், பள்ளிக்கல்வி சமக்ர சிக்சா கல்வி திட்டம் ஆகியவற்றிற்கான நிதியை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளதாக அவர் கூறினார்.
 
இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை பாதுகாக்க, சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி மனு அளித்தேன் என்று அவர் கூறினார். மீனவர் விவகாரத்தை இலங்கையின் புதிய அதிபரிடம் தெரிவிக்க பிரதமரிடம் கோரியுள்ளேன் என்றும் இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்கள், 191 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளதாகவும் கூறினார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பு இனியதாக இருந்தது என்றும் இனிய சந்திப்பை மகிழ்ச்சியான சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கையில் தான் உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். முதல்வர்களுக்கு 15 நிமிடம்தான் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குவார்கள், ஆனால் எனக்கு 40 நிமிடம் ஒதுக்கினார் என்று அவர் தெரிவித்தார். 

மேலும் கச்சத்தீவை திமுக தாரை வார்த்ததாக திரும்பத் திரும்ப தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். செந்தில் பாலாஜி சட்டப்படி வழக்கை எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் போராடி வழக்கில் இருந்து விடுதலை பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

 

Sonia Gandhi
பிரதமரை சந்தித்த பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.