பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்.. சம்பவ இடத்திலேயே பலியானதால் அதிர்ச்சி..!
மத்திய பிரதேச மாநிலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட நிலையில், பள்ளி முதல்வர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் தாமோரா அரசு பள்ளியில் சக்சேனா என்ற 55 வயது நபர் முதல்வராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்று அவர் பள்ளியின் கழிவறைக்கு சென்றபோது, பின்னால் சென்ற 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவரை நோக்கி சுட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில், சக்சேனாவின் தலையில் குண்டு பாய்ந்ததால் அவர் அங்கேயே உயிரிழந்தார். அதன் பின்னர், அந்த மாணவன் தனது கூட்டாளியுடன் முதல்வரின் இருசக்கர வாகனத்தை திருடி அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவன் மற்றும் அவரது கூட்டாளி ஆகிய இருவரும் அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்பது விசாரணையின் முதல் கட்டத்தில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூடு ஏன் நடைபெற்றது என்பது இன்னும் தெரியவில்லை.
இந்த சம்பவத்துக்குப் பிறகு காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள இரண்டு மாணவர்களையும் தேடி வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக பள்ளி முதல்வராக பணியாற்றிய சக்சேனாவின் கொலை அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Edited by Siva