சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ரூ.1000 அபராதம் விதித்த பஞ்சாயத்து
பீகார் மாநிலத்தில் வாலிபர் ஒருவரால் மிரட்டி கடந்த 6 மாதங்களாக சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனை விசாரித்த கிராம பஞ்சாயத்தினர் அந்த வாலிபருக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்தது கண்டனத்துக்குள்ளாகி உள்ளது.
சித்பூர் கிராமத்தை சேர்ந்த 7-ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவியை ஆகாஷ் என்ற வாலிபர் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளான். இதனை தனது பெற்றோரிடம் தெரிவிக்க பயந்த அந்த மாணவி மறைத்து வந்துள்ளார்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அந்த வாலிபர் சிறுமியை பெற்றோரிடம் கூறிவிடுவேன் என மிரட்டி கடந்த 6 மாதங்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுமி கர்ப்பமாக இந்த விவகாரம் வெளியே தெரியவந்தது.
சிறுமியின் பெற்றோர்கள் ஞாயம் கேட்டு கிராம பஞ்சாயத்தை நாடினர். பஞ்சாயத்தில் வாலிபரின் பெற்றோர்கள் இந்த விவகாரத்தை சுமூகமாக முடிக்க விரும்பி தங்கள் மகனை அந்த சிறுமிக்கே திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தனர்.
ஆனால் இதற்கு சம்மதம் தெரிவிக்காத பஞ்சாயத்தினர், இது பலாத்காரம் இல்லை, இருவரும் விரும்பி தான் உறவில் ஈடுபட்டுள்ளனர். எனவே 1000 ரூபாய் அபராதத்தை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கட்டினால் போதும் என உத்தரவிட்டனர்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் வாலிபர் ஆகாசை கைது செய்துள்ளனர். பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.