கின்னஸில் மோடியின் ‘சூட்’ - ராகுல் செம கிண்டல்
பிரதமர் நரேந்திர மோடியின் ‘சூட்’ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததை, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவிற்கு வருகை புரிந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி, விலை உயர்ந்த, ‘சூட்’ அணிந்து, நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த ஆடையில் நரேந்திர தாஸ் மோடி [NARENDRADAS MODI] என குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்த ஆடையின் மதிப்பு, 10 லட்சம் ரூபாய் என கூறப்பட்டது. அந்த ஆடை, ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் பங்கேற்ற குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த லால்ஜிபாய் துளசிபாய் படேல், 4.31 கோடி ரூபாய்க்கு மோடியின், ‘சூட்’ டை வாங்கினார்.
இந்த ‘சூட்’ மிக அதிக விலைக்கு ஏலம் போன ஆடையாக, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஏலத்தில் கிடைத்த பணம், கங்கை நதியை சுத்தம் செய்வதற்கான நிதியில் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், டுவிட்டரில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், 'மோடியின் மகத்தான தியாகத்துக்கு கிடைத்த சிறிய வெகுமதி' என பதிவிட்டுள்ளார்.
மேலும், "மோடிஜி உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்: அஸ்தோம சட்கமய, தமசோம ஜோதிர்கமய, ம்ரித்யோர்ம அமிர்தம் கமய, ஓம் சாந்தி சாந்தி சாந்தி’ என்ற மந்திரத்தையும் குறிப்பிட்டுள்ளார்.