இரண்டு வாழை பழம் 442 ரூபாயா? அதிர்ந்துபோன பிரபல நடிகர்
பிரபல ஹிந்தி நடிகர் ஒருவர், ஹோட்டலில் சாப்பிட்ட இரண்டு வாழை பழத்திற்கு 442 ரூபாய் பில் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ராகுல் போஸ், பெங்காலி, ஹிந்தி, தமிழ், ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாது இயக்குனரும், சமூக ஆர்வலரும் ஆவார். மேலும் தமிழில் விஸ்வரூபம் திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் ராகுல் போஸ் சண்டிகரில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் படப்பிடிப்பிற்காக தங்கியுள்ளார். உடற்பயிற்சி முடிந்ததும் வாழை பழம் வேண்டும் என கேட்டுள்ளார். அந்த வாழை பழத்துடன் வந்த ரசீதை ராகுல் போஸ் பார்த்ததும் பெரும் அதிர்ச்சியடைந்தார். அதில் இரண்டு வாழைப்பழங்களின் விலை, 375 ரூபாய் எனவும், ஜி.எஸ்.டி. வரி ரூ.67.50 எனவும் அச்சிட்டிருந்தது. இதை தொடர்ந்து அந்த வாழை பழம் வாங்கியதற்கான ரசீதை, ராகுல் போஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,
“பழங்களால் நமது உயிருக்கு ஆபத்தில்லை என்று யார் சொன்னார்கள்? நீங்கள் இதை பார்த்தால் அதனை நம்பமாட்டீர்கள்” என கேலியாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த வாழை பழ பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது