1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2019 (16:03 IST)

ப சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் ஆகியோருக்கு ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன்..

ப சிதம்பரத்திற்கும், கார்த்திக் சிதம்பரத்திற்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு, ப சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஏர்செல் மேக்சிஸ் நிறுவனம் விதிமுறைகளை மீறீ முதலீடு செய்வதற்கான அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ப சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனமும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக சி.பி.ஐ குற்றம் சாட்டியது. பின்னர் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை, ப சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகிய இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதன்பிறகு இருவரும் தங்களை கைது செய்வதற்கு தடை விதிக்க கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்வதற்கு சிறப்பு நீதிமன்றம் பல முறை தடை விதித்தது. இந்நிலையில் செப்டம்பர் 3 ஆம் தேதி, ப சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் அளித்த மனுவில் உத்தரவு பிறப்பிக்கிறோம் எனவும் அதுவரை கைது செய்வதற்கான தடை நீட்டிக்கப்படும் எனவும் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது. பின்பு இந்த வழக்கை பரீசிலிக்க செப்டம்பர் 5 வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதன் படி இன்று மனுவை பரீசிலித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், ப சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோருக்கு ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் இருந்து முன் ஜாமீன் வழங்கப்படுவதாக உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை, ப சிதம்பரத்தின் மீது தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், தற்போது ஏர்செல் மேக்சிஸ் நிறுவன முறைகேடு வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.