மோடியைத் தொடர்ந்து ராகுல்காந்தியும் அமெரிக்கா பயணம்


Bharathi| Last Modified புதன், 23 செப்டம்பர் 2015 (07:27 IST)
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லும் அதே நாளில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் அந்நாட்டிற்கு செல்ல உள்ளார்.

 
 
கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்காத ராகுல்காந்தி, 56 நாட்கள் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  ராகுல்காந்தி எந்த நாட்டில் உள்ளார் என்பது மர்மமாகவே இருந்தது. பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்காத ராகுல்காந்தியை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
 
இந்நிலையில் வெளிப்படையற்ற சுற்றுப்பயணத்தை ராகுல் காந்தி மீண்டும் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா கூறுகையில், "அமெரிக்காவின் ஆஸ்பன் நகரில் நடைபெறும் கருத்தரங்கில் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளார். இந்த கருத்தரங்கில் அரசு மற்றும் தனியார் அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்".
 
"ராகுலின் அமெரிக்க பயணம் குறித்து வெளியாகும் வதந்திகளை நிராகரிக்கிறோம். அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு ராகுல் காந்தி விரைவில் நாடு திரும்புவார். பீகார் தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுவார் ".என்று தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :