1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 18 மே 2024 (15:23 IST)

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

nithin gatkari
அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை எந்த அரசாங்கத்தினாலும் மாற்ற முடியாது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
 
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அவர்கள், அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுவது குறித்து பேசியதாகவும் பல பாஜக தலைவர்களும் இதே போன்று பேசியும் பிரதமர் நரேந்திர மோடி மவுனமாக இருந்து வருவதாகவும் காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அரசியலமைப்பிற்கு எதிராக பேசுபவர்கள் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்கமாட்டார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
 
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் கூட்டணி கட்சியான சிவசேனா வேட்பாளர் ஹேமந்த் துக்காராம் கோட்சேவை ஆதரித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால், அரசியலமைப்பு மாற்றப்படும் என்று காங்கிரஸ் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது என்றார்.


அரசியலமைப்பை காங்கிரஸ் 80 முறை திருத்தியுள்ளது என்றும் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை எந்த அரசாங்கத்தினாலும் மாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். அதில் உள்ள செக்சன்களில் சிறு மாற்றம் வேண்டுமானால் செய்யலாம் என்று நிதின் கட்கரி கூறினார்.