வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 28 மே 2024 (12:07 IST)

கெஜ்ரிவாலுக்கு ஜாமின் நீட்டிப்பு இல்லை..! தலைமை நீதிபதியிடம் முறையிட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.!!

Aravind Kejriwal
இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டுமென்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜாமின் நீட்டிப்பு குறித்து தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
புதிய மதுபான கொள்கை முறைகேடு  வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரியும், இடைக்கால ஜாமீன் கோரியும் முதல்வர் கெஜ்ரிவால் தொடர்ந்த மனுக்களை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவை கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்தது.
 
டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அமலாக்கத்துறை கைதை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும் எனவும் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
 
மேலும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவும் அனுமதி வழங்கியது. ஆனால் அரசு விவகாரத்தில் தலையிடவோ அல்லது முதல்வர் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி அரசின் கோப்புகளில் கையெழுத்திடும் பணிகளில் ஈடுபடக் கூடாது என்றும் தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் ஜூன் 2ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணை அமைப்பின் மூலம் திகார் சிறையில் சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
 
இந்த நிலையில், இடைக்கால ஜாமினை நீட்டிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில் உடல்நலக்குறைவு காரணமாக PET-CT ஸ்கேன் எடுக்க வேண்டியுள்ளதாகக் இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் மனுவில் கோரிக்கை வைத்தார்.
 
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்த நீதிபதிகள், வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது என தெரிவித்தனர். ஜாமின் நீட்டிப்பு குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் எனவும் அவரிடம் முறையிடுமாறும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.