நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!
நீட் தேர்வில் நடந்த முறைகேடு மற்றும் குளறுபடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது.
தமிழ் உட்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதிலும் குளறுபடி நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பீஹாரில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மஹாராஷ்டிராவில் 2 பேரிடம் விசாரணை நடந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதனை ஏற்று, நீட் தேர்வில் நடந்த முறைகேடு மற்றும் குளறுபடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.