வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2017 (16:31 IST)

தலித் வாலிபரோடு திருமணம் - முஸ்லீம் கர்ப்பிணி பெண் எரித்துக் கொலை

தலித் வாலிபரை காதலித்து திருமணம் செய்த, முஸ்லீம் பெண்ணை கரிப்பிணி என்றும் பாராமல் எரித்துக்கொன்ற சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கர்நாடக மாநிலம் பிஜபூர் மாவட்டத்தில் உள்ள குண்டகனாலா கிராமத்தில் வசிப்பவர் பானு பேகம்(21). இவரும் அதே கிராமத்தை சேர்ந்த சாயபண்ண சரணப்பா(24) என்ற தலித் வாலிபரும் காதலித்து வந்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அவர்களின் திருமணத்தை இரு வீட்டாரும் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. எனவே, அவர்கள் இருவரும் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில்,  பானு பேகம் கர்ப்பிணியானார். எனவே, தற்போது தனது கிராமத்திற்கு சென்றால் தனது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார் என நினைத்து கடந்த சனிக்கிழமை சென்றார். அவருடன் சரணப்பாவும் சென்றுள்ளார். ஆனால், அப்போதும் பானுவை அவரின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.  அதேபோல், சரணப்பாவின் தந்தையும் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
 
எனவே, அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சரணப்பாவின் தந்தை, பானுவின் தாய் மற்றும் சகோதரன் ஆகியோர் சரணப்பாவை கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பி சென்ற சரணப்பா, அவர்களை பற்றி புகார் கூற காவல்நிலையம் சென்றுள்ளார். புகார் அளித்து விட்டு திரும்பி வந்து பார்க்கும் போது, அவரின் மனைவி பானு எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், அவரது உடலில் பட இடங்களில் கத்திக்குத்தும் இருந்தது.
 
இதைக் கண்டு கண்ணீர் வடித்த சரணப்பா, இதுபற்றி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார் சரணப்பாவின் தந்தை, பானுவின் தாய், சகோதரன் மற்றும் தங்கை ஆகியோரை கைது செய்தனர்.
 
இந்த விவகாரம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.