1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 7 மார்ச் 2016 (15:17 IST)

கெஞ்சிக் கேட்டும் உதவி செய்யவில்லை ஸ்மிருதி இரானி : விபத்தில் மரணமடைந்த மருத்துவரின் மகள் புகார்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, கடந்த சனிக்கிழமை நள்ளிரவு, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு காரில் டெல்லி திரும்பி கொண்டிருந்தார்.


 
யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அவரது கார் முன்னாடி சென்று கொண்டிருந்த மற்றொரு காரின் மீது மோதியது. இந்த விபத்தில், ஸ்மிருதி இரானிக்கு கை மற்றும் காலில் சிறிய காயம் ஏற்பட்டது. காயங்கள் பெரிய அளவில் இருக்கவில்லை என்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.
 
இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்மிருதி இரானி கூறும் போது “ நான் நலமுடன் உள்ளேன் என்மீது அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் நன்றி. விபத்தில் காயம் அடைந்தவர்களுக்க்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளேன். அவர்கள் நலம் பெற பிரார்தனை செய்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
 
அந்த விபத்தில், ரமேஷ் நாகர் எனும் மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மகள் சாண்டிலி கூறும் போது “ அமைச்சர் வந்த கார் மோதியதில், எங்களது கார் நிலை குலைந்து விபத்துக்குள்ளானது. நாங்கள் தூக்கி விசப்பட்டோம். அந்த விபத்தில் என் தந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 
 
விபத்து ஏற்பட்டதும், அமைச்சர் காரில் இருந்து கீழே இறங்கி வந்து எங்களைப் பார்த்தார். நான் அவரிடம் ஓடிப்போய் கையெடுத்துக் கும்பிட்டு, எங்களுக்கு உதவி செய்யுமாறு வேண்டினேன். ஆனால் அவர் எதுவும் பேசாமல், காரில் சென்று விட்டார். அவர் உடனே உதவி செய்திருந்தால் என் தந்தை உயிர் பிழைத்திருப்பார்” என்று கூறியுள்ளார். 
 
ரமேஷ் நாகரின் மகன் அபிஷேக் இதுபற்றி கூறும்போது “எனது தங்கை அமைச்சரிடம் உதவி செய்யுமாறு கெஞ்சினாள். ஆனால் அவர் எங்களுக்கு உதவவில்லை. எங்களுக்கு உதவி செய்ததாக அவர் கூறியிருப்பது பொய்” என்று கூறினார்.