நீட் தேர்வில் முறைகேடு.? குழு அமைத்து விசாரணை..! மத்திய உயர்கல்வி செயலாளர் தகவல்..!
நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக குழு அமைத்து விசாரிக்கப்படும் என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு நடந்துள்ளதால், மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மராட்டிய மாநில பாஜக கூட்டணி அரசும் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி, நீட் தேர்வு புகார் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என்றார். விசாரணைக்குழு ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் வெளிப்படைத் தன்மையுடன் நீட் தேர்வு நடை பெற்றது என்றும் அவர் தெரிவித்தார்.
720 மதிப்பெண்ணுக்கு 718 மற்றும் 719 மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றதில் எந்த முறைகேடும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், மைனஸ் மதிப்பெண் பெற்றவர்கள் கருணை மதிப்பெண்ணால் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர் என்று விளக்கம் அளித்தார். நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் தேர்வு முகமை தரப்பில் வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறினார்.
தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீட் தேர்வு குறித்து மாணவர்கள் அளித்துள்ள புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி தெரிவித்தார்.