பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும்..! மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை..!!
தேர்தல் பத்திர முறைகேடுகள் அம்பலமாகியுள்ளதால் பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் பத்திர விவரங்களை நேற்று மாலை தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டது. இதில், தேர்தல் பத்திரங்களை வழங்கியவர்களின் விவரங்கள் தேதி வாரியாக இடம் பெற்றுள்ளன. தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றின என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி பாஜகவிற்கே சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக 11,562.5 கோடி ரூபாய் நிதியில் 6,566 கோடி ரூபாயை பாஜக நிதியாக பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது.
இதில், அரசியல் கட்சிகளுக்கு கோடிகளை அள்ளிக்கொடுத்த டாப் 10 நிறுவனங்களில், 'லாட்டரி' மார்டினின் நிறுவனம் 1,368 கோடி நன்கொடை வழங்கி உள்ளது. 'லாட்டரி கிங்' என அழைக்கப்படும் சாண்டியாகோ மார்டினின் ஃபியூச்சர் கேமிங், ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம், தேர்தல் பத்திரங்கள் மூலமாக அதிகபட்சமாக 1,368 கோடி ரூபாய் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார்.
தேர்தல் பத்திர முறைகேடுகள் அம்பலமாகியுள்ளதால் பாஜகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் பத்திர முறைகேடு குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.