காங்கிரஸ் பெரும்பான்மை: கலக்கத்தில் பாஜக!
ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பெரும்பான்மை இடங்களில் காங்கிரஸ் முன்னனியில் உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 81 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் மாநிலத்திற்கு கடந்த நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி 78 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கூட்டணி 40க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னனியில் உள்ளது. பாஜக 25 இடங்களிலும், மற்ற கட்சிகள் 8 இடங்களிலும் முன்னனி வகிக்கின்றன.
பல மாநிலங்களிலும் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்ற பாஜக சமீப கால தேர்தல்களில் சரிவை சந்தித்து வருகிறது. மகாராஷ்டிர தேர்தலில் பெரும்பான்மைக்கு நெருக்கமான அளவில் தொகுதிகள் பெற்றிருந்தும் சிவசேனா கட்சி கூட்டணியிலிருந்து விலகியதும், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்ததும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் தேர்தல் முடிவுகளிலும் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது வடக்கில் பாஜக ஈர்ப்பு குறைந்து வருகிறதா என்ற கேள்வியை உண்டாக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.