உண்ணாவிரதம் இருந்து உயிர்விடுவது குற்றமா? உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை


லெனின் அகத்தியநாடன்| Last Modified செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (15:34 IST)
உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தல் என்பது சட்டவிரோதமானது என்ற ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெயின் துறவிகள் வயதான பிறகு உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்தல் (சந்தாரா) பழக்கத்தை காலம் காலமாக கடைப்பிடித்து வருகிறார்கள். உண்ணாவிரதம் இருக்கும்போது அவர்கள் உணவு, நீர் எதுவும் சாப்பிடாமல் உயிர் விடுவார்கள்.
 
கடந்த 2006ஆம் ஆண்டு 93 வயது ஜெயின் துறவி கேயிலா தேவ் ஹிராவத் ஜெய்பூர் நகரில் இப்படி உண்ணாநோன்பு இருந்து உயிர்விட்டார். இந்த நவீன உலகத்தில் இப்படி உண்ணா நோன்பிருந்து உயிர்விடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று விவாதம் எழுந்தது.
 
இது பற்றி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தல் பழக்கத்துக்கு தடை விதித்தது. மேலும் உண்ணாநோன்பு இருந்து உயிர் விடுவது தற்கொலை செய்வதற்கு சமமானதாகும். இதனால் உண்ணாநோன்பு இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தனது உத்தரவில் குறிப்பிட்டு இருந்தது.
 
இந்த உத்தரவு ஜெயின் சமூகத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான நீதிபதிகள் பெஞ்சு விசாரித்து ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :