ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (16:49 IST)

பாலியல் குற்றவாளிகளுக்கு இனி தூக்கு.! மேற்கு வங்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்.!!

Hanging Bill
பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா, மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் மருத்துவர், கடந்த 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள்,  பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  மேலும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மேற்குவங்க அரசுக்கு மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 
இதனிடையே பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, மசோதா மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க, முன்மாதிரியான மசோதா என்றும் நல்ல எண்ணம் உள்ளவர் எவரும் இதை ஆதரிப்பர் என்றும் தெரிவித்தார். இந்த மசோதாவில் கையெழுத்திட மாநில ஆளுநரை, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  குற்றவாளிகளை சிபிஐ தூக்கிலிட வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
 
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, இந்த மசோதாவுக்கு முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்தார்.  மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.

 
தொடர்ந்து மசோதா மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.