திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2020 (09:33 IST)

விவசாயிகள் போராட்டம்: மதகுரு மரணம்; கெஜ்ரிவால் ஆதங்கம்!!

சீக்கிய மதகுரு தற்கொலைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப் அரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்து போராட்டம் செய்து வருவதால் தலைநகர் டெல்லி பெரும் பரபரப்பில் உள்ளது.
 
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகளுடன் பல கட்ட பேச்சு வார்த்தைகளை மத்திய அரசு நடத்தியும் சுமுகமான முடிவு எட்டப்படாததால் போராட்டம் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றனர் என்பதும், பாஜக அலுவலகங்களை மூடுதல், ரயில் மறியல் செய்தல் உள்ளிட்ட போராட்டத்தை அவர்கள் தொடர்வதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு தேவையான வசதிகள் கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் கலக்கத்தில் இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் சீக்கிய மதகுரு ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன் அவர்கள் எழுதிய கடிதத்தில் ’போராடும் விவசாயிகளின் அவலத்தைப் பார்த்து தன்னால் பொறுக்க முடியவில்லை’ என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். 
 
இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவரின் தற்கொலைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார். இது உறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். 
 
சந்த் பாபா ராம் சிங் ஜியின் தற்கொலை பற்றிய செய்தி வேதனையானது. இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் விவசாயிகள் தங்கள் உரிமைகளை கேட்கிறார்கள். விவசாயிகளின் குரலை அரசாங்கம் கேட்க வேண்டும், மூன்று கருப்பு சட்டங்களும் திரும்பப் பெறப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.