ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2024 (08:25 IST)

இனி சாட்டிலைட் மூலம் சுங்கக்கட்டணம் வசூல்..! எப்படி வசூலிக்கப்படும்? - நெடுஞ்சாலை துறை அறிவிப்பு!

இந்தியா முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் இனி சாட்டிலைட் ட்ராக்கிங் மூலமாக வசூலிக்கப்படும் என மத்திய நெடுஞ்சாலை துறை தெரிவித்திருந்த நிலையில் சில பகுதிகளில் இந்த முறை அமலுக்கு வந்துள்ளது.

 

 

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்க பாஸ்டேக் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் மத்திய நெடுஞ்சாலை துறை, வருங்காலத்தில் சுங்க கட்டணம் சாட்டிலைட் மூலமாக தூரத்தை கணக்கிட்டு வசூலிக்கப்படும் என கூறியிருந்தது.

 

தற்போது உள்ள பாஸ்டேக் முறையில் தூரத்தை கணக்கிட முடியாது என்பதால் அந்தந்த சுங்கச்சாவடிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் குலோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் (GNSS) முறையில் எவ்வளவு தூரம் பயணிக்கிறோமோ அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்பதால் இந்த புதிய நடைமுறை மீதான எதிர்பார்ப்புகள் உள்ளது.
 

 

பரிசோதனை முயற்சியாக பெங்களூரு - மைசூர் தேசிய நெடுஞ்சாலை, அரியானாவில் பானிபட் - ஹிசார் நெடுஞ்சாலையில் இந்த திட்டம் அமலானது. அதை தொடர்ந்து நேற்று முன் தினம் முதலாக மேலும் சில நெடுஞ்சாலைகளிலும் இந்த புதிய முறை அமலுக்கு வந்துள்ளது. நெடுஞ்சாலையில் வாகனம் பயணிக்கும் தூரத்தை கணிக்க ஓ.பி.யு சாதனங்கள் வாகனத்தில் பொருத்தப்பட வேண்டியுள்ளது.

 

இந்த புதிய ஜி.என்.எஸ்.எஸ் முறையின் மூலம் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் முதல் 20 கி.மீக்கு சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதற்கு பிறகான பயண தூரத்தை கணக்கிட்டு அதற்கான தொகையை பாஸ்டேக் போலவே டிஜிட்டல் முறையில் வசூலிக்கப்படும்.

 

Edit by Prasanth.K