மூன்றே நாட்களில் 11 லட்சத்தை தாண்டிய கொரோனா! – சமூக பரவலை அடைந்ததா இந்தியா?
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் உலக அளவில் பாதிப்பில் ரஷ்யாவை தாண்டி மூன்றாவது இடத்தை அடைந்துள்ளது இந்தியா.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் 11 லட்சம் பாதிப்புகளை தாண்டி இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 11,18,043 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 27,497 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 7,00,087 ஆக உயர்ந்துள்ளது. மூன்றே தினங்களுக்குள்ளாக 10லிருந்து 11 லட்சமாக கொரோனா பாதிப்புகள் வேகமாக உயர்ந்துள்ளது சமூக பரவலாக கொரோனா மாறிவிட்டதா என்ற பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,10,455 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,854 பேர் பலியான நிலையில் 1,69,569 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 1,70,693 ஆக உள்ள நிலையில் 2,481 பேர் பலியாகியுள்ளனர். 1,17,915 பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியல்.
டெல்லி – 1,22,793
கர்நாடகா – 63,772
குஜராத் – 48,355
உத்தர பிரதேசம் – 49,247
தெலுங்கானா – 45,076
மேற்கு வங்கம் – 42,487
ராஜஸ்தான் – 29,434
ஹரியானா – 26,164
மத்திய பிரதேசம் – 22,600