குட்கா வழக்கு; சிபிஐ விசாரிக்க தடையில்லை - உச்சநீதிமன்றம் அதிரடி
குட்கா வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை செய்ய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை போலீஸ் ஆணையராக இருந்த ஜார்ஜ் ஆகியோருக்கு ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த விவகாரத்தை லஞ்ச ஒழுப்புத்துறை விசாரித்து வந்தது.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக சார்பில் எம்.எல்.ஏ அன்பழகன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு அளிக்கப்படமாட்டாது என கூறப்பட்டது. அனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குட்கா வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி இவ்வழக்கை அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.