செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 21 செப்டம்பர் 2014 (16:35 IST)

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணிக்குள் விரிசல் அதிகரிப்பு

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் தொகுதி கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனை பாஜக மூத்த தலைவர்களுடன் பேசுவதற்கு அனுப்புவதா என பாஜகவினர் கோபமடைந்துள்ளனர்.
 
மகாராஷ்டிராவில் வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ்-என்சிபி மற்றும் பாஜக -சிவசேனா ஆகிவற்றின் இடையே இன்னும் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
 
மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் குறைந்தது 150 தொகுதிகளாவது தங்களுக்கு வேண்டும் என பாஜக உறுதியாக உள்ளது. ஆனால் 119 தொகுதிகளை மட்டுமே பாஜவுக்கு அளிக்க முடியும் என்று சிவசேனா தெரிவித்துவிட்டது. இம்முறை 200க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டு பெரும்பான்மை இடத்தை கைப்பற்றி ஆட்சி அமைக்க வேண்டும் என சிவசேனா விரும்புகிறது. அதேபோல் முதல்வர் வேட்பாளராக தங்களது கட்சியினரைத்தான் அறிவிக்க வேண்டும் என்றும் சிவசேனா கூறுகிறது. ஆனால் கூட்டணிக்காக கட்சியின் சுயமரியாதையை இழக்க முடியாது, ஒத்துவராவிட்டால் தனித்து போட்டியிடுவோம் என பாஜக தலைவர் அமித்ஷா இருதினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இதனால் அங்கு பாஜக - சிவசேனா கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது.
 
இதற்கிடையில் பாஜக மூத்த தலைவர் ஓ.பி.மாத்தூரை நேற்று முன்தினம் சிவசேனா தலைவர் உத்தவின் மகன் ஆதித்யா தாக்கரே சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தினார். இது பாஜக நிர்வாகிகள் மத்தியிடும் கடும் அதிருப்தியை ஏற்படுத் தியுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர்கள் சிலர் கூறுகையில், லோக்சபா தேர்தலில் மோடி அலை காரணமாகவே சிவசேனா 18 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. ஆனால் தற்போது அதனை மறந்துவிட்டு சட்டமன்றத்தில் சமமான அளவுக்கு தொகுதிகளை பங்கிட மறுக்கிறது.
 
மேலும் அரசியல் அனுபவம் சிறிதும் இல்லாத ஆதித்யா தாக்கரேவை தொகுதி பேச்சுவார்த்தைக்கு அனுப்பியுள்ளது பாஜக தலைவர்கள் மனதை புண்படுத்தியுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் பாஜக தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் கூட்டணியில் மேலும் விரிசல் அதிகரித்துள்ளது.